Thursday, April 01, 2004

கவிதாயினி வைகைச் செல்வி

அண்ணா கண்ணன்

பெண்ணைக் கவிதை என்று வர்ணிப்பவர்கள் அதிகம். கவிதா என்றும் காவியா என்றும் சிந்து என்றும் இன்னும் ஏராளமான இராகங்களின் பெயரிலும் பெண்களை உலகம் அழைக்கிறது. அப்படியானால், பெண் கவிஞர்களை கவிதை எழுதும் கவிதை எனலாமோ!

சங்க காலத்தில் தொகையான பெண்கள், கவிதை எழுதினார்கள். நீண்ட இடைவெளிக்குப் பிறகு இப்பொழுது மீண்டு(ம்) பரவலாகப் பெண்கள் எழுதத் தொடங்கியிருக்கிறார்கள். வளர்ந்து வரும் இந்தக் கவிதைப் பெண்களில் குறிப்பிடத்தகுந்தவர், வைகைச் செல்வி.

"கருவில் பெண்ணை அழிப்போர்க்குக் காட்டை அழித்தல் பெரிதாமோ?" என்றும் ரயில்பெட்டி எரித்துச் சவப்பெட்டி செய்யலாமா?" என்றும்

"கயவர்கள் உலகத்தில் பந்தக்கால் தேவையில்லை சொந்தக்கால் போதுமடா" என்றும்

"மரம் தனது கைகளை உயர்த்தி வானில் எழுத ஓயாமல் போராடுகிறது பூமியோ விடுதலை தருவதில்லை" என்றும்

"பகலுக்கு ஒரு விளக்கு. இரவிற்கோ எண்ணற்ற விளக்குகள்" என்றும்

"ஆர்ப்பரிக்கும் நுரைமீது முத்துக்கள் பவனிவரா" என்றும்

எளிய, சிறிய வரிகளில் வலிய கவிதைகளைப் படைத்துள்ளார்.

மதுரையில் பிறந்து சென்னையில் வாழும் இவரின் இயற்பெயர், ஆனி ஜோசபின், 1980 முதல் தொடர்ந்து கவிதைகள் எழுதி வரும் இவருடைய முதல் கவிதைத் தொகுப்பான "அம்மி" சில மாதங்களுக்கு முன் வெளிவந்து நல்ல கவனிப்பைப் பெற்றது.

"கிப்ரானை நேசிக்கத் தெரிந்த இப்பெண்மணி எனக்கு கமலாதாஸை விட உயர்ந்தவர், அம்ரிதா பிரீத்தத்தை விடச் சிறந்தவர்" என்கிறார், வலம்புரிஜான்,

"தனிப்பட்ட மன முறிவுகளைத் தாண்டி பொது இழப்புகளைப் பெண்கள் ஆராயத் தலைப்பட்டிருக்கிறார்கள். அவர்கள் மிகச் சிலரே. எனினும் அவர்கள் ஒரு புதிய பாதையின் முன்னோடிகள். வைகைச் செல்வி அவர்களில் ஒருவர்" என மாலன் சிலாகிக்கிறார்.

"வைகைச் செல்வியின் கவிதைகளில் கதவு விரியத் திறந்திருக்கிறது. வாசகர்கள் சிரமமின்றி நுழையலாம்" என உறுதி தருகிறார். ப. இளைய பெருமாள்.

"என் நேசத்தை
இன்னும் நீ அறியவில்லையே
என்ற துயரத்தில்
அறுபட்டுத் தொங்கும்
செடியைப் போலத்
தலைகவிழ்ந்தபடி
என் உயிர் துடிப்பது
உனக்குக் கேட்கிறதா?" (உயிரின் ஒலி)

"களைத்துச் சோர்வுடன்
வீடு திரும்புகையில்
வாசல் மரம் உதிர்க்கும் பூவொன்று
கன்னத்தில் மோதுகையில்
உன் முத்தத்தைச் சுமக்கிறேன்" (நீயும்..நானும்..பூமரமும்)

"இறைவா
மரமாய் மாற வரம் வேண்டும்.
அப்போது
ஆயிரமாயிரம் கரங்கள் வரும்
ஆயிரமாயிரம் பூப்பூக்கும்" (வரம் வேண்டும்)

"மரங்களை வெட்டாதீர்
வெட்டுகையில்
என் இதயத்துடிப்பு
மெல்ல மெல்லக் குறையும்" (மரங்களே ஓ மரங்களே)

இவருடைய கவிதைப் பரப்பில் மரங்கள், தனியிடம் பெறுகின்றன. அதற்கேற்ப இவர், தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரிய மேலாளராகப் பணிபுரிகிறார். ஆங்கில இலக்கியம், வணிகவியல், வணிக மேலாண்மை ஆகியவற்றில் முதுகலைப் பட்டம் பெற்றவர். இப்போது "பெண்களும் சுற்றுச்சூழல் மேலாண்மையும்" என்ற தலைப்பில் முனைவர் பட்டத்துக்காக ஆராய்ச்சி செய்கிறார். சுற்றுச் சூழல் பயிற்சிக்காக டென்மார்க், வங்காளதேசம் நாடுகளுக்குச் சென்று வந்துள்ளார்.

பெண் சுதந்திரம் பற்றி இவரிடம் கேட்டால் "பொறுப்போடு உள்ளதே சுதந்திரம். தான்தோன்றித்தனம் அல்ல" எனப் பட்டெனச் சொல்கிறார். சமகால இலக்கியப் போக்குப் பற்றிக் சண்டையிடுவதும் அவதூறாகப் பேசுவதும் வேதனை அளிக்கிறது" என்றார்.

"வேலைக்குப் போகும் பெண்களின் சிக்கலை வைத்து ஒரு நாவல் எழுத வேண்டும். சுற்றுச் சூழலைப் பற்றி விவரணப் படம் எடுக்க வேண்டும்" என எதிர்காலத் திட்டங்களைச் சொன்னார்.

"என்னைப் பார்த்து ஊர்கூடிச் சொல்கிறது. "நான் பள்ளத்தில் இருக்கிறேனாம்' ஆம்
அவர்கள் எல்லாரும் ஏறி நின்றும் என் தட்டு மட்டும் தாழ்ந்திருக்கிறது" என்கிற வைகைச் செல்வி, நம்பிக்கையூட்டும் படைப்பாளியாக மிளிர்கிறார்.

இந்த வைகையின் கரையில் தமிழ் வாழும்.

(அமுதசுரபி, ஆகஸ்ட் 2003)

No comments: